யார் பாட்டன் சொத்தும் இல்லை - மத்திய அரசை வறுத்தெடுத்த பிடிஆர்!

DMK Stalin PTR Palanivel Thiagarajan
By mohanelango Jun 06, 2021 11:57 AM GMT
Report

தமிழ்நாட்டின் நிதியமைச்சர்... பி.டி.ஆர் என இணையவாசிகளால் அன்போடு அழைக்கப்படும் பழனிவேல் தியாகராஜன் தான் சமீப நாட்களாக சோசியல் மீடியாவின் வைரல் திலகம்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயின்று சர்வதேச வங்கிகளில் தலைமை பொறுப்புகளில் பணியாற்றிய பி.டி.ஆர் தன்னுடைய குடும்ப பாரம்பரியத்தை தொடர பொது வாழ்வில் அடிஎடுத்து வைத்தார்.

நீதிக்கட்சி காலம் தொட்டு திராவிட இயக்க பாரம்பரியம் கொண்ட பி.டி.ஆர் மூன்றாம் தலைமுறை அரசியல்வாதி. 2016 தேர்தலில் முதல் முறையாக மதுரையில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதும் பல தொலைக்காட்சி விவாதங்கள். நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு எதிரணியினர் திணரடித்தார் பிடிஆர். இன்று தமிழ்நாட்டின் நிதியமைச்சராக முதல் பாலில் இருந்தே சிக்ஸராக அடித்து விளையாடுகிறார் பிடிஆர்.

ஜக்கி வாசுதேவ் தொடங்கி எச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன் வரை பிடிஆரிடம் வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொண்டவர்கள் அதிகம். மற்ற திமுகவினரைப் போல கடவுள் மறுப்பு, நாத்திகம் எனப் பேசாமல் ஆன்மீகத்தை மிக வெளிப்படையாக பின்பற்றுபவர் பி.டி.ஆர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலோடு அவருடைய குடும்பத்திற்கு பாரம்பரிய தொடர்பு உண்டு.


இந்தப் பின்னணியிலே திமுகவின் கூட்டாச்சி தத்துவம், பகுத்தறிவு, மாநில உரிமை, மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளையும் ஒரு சேர பிடிஆர் முன்னிறுத்துவது தான் திமுகவிற்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஜி.எஸ்.டி கூட்டத்தில் பி.டி.ஆர் ஆற்றிய உரை தான் தேசிய அளவில் பேசு பொருள். கூட்டாச்சி, மாநில உரிமைக்கான குரலாக பி.டி.ஆரின் பேச்சுகள் அமைந்துள்ளன.

ஆங்கில, வட இந்திய ஊடகங்கள் வரிசைகட்டிக் கொண்டு பிடிஆர் பற்றிய செய்திகளை, பேட்டிகளை வெளியிட்டு வருகின்றன. நுனிநாக்கில் ஆங்கிலம், தமிழ் என இரண்டிலும் சரளமாக சம்மட்டி அடிகொடுக்கும் பிடிஆரின் மொழி அவரை ஊடகங்களின் செல்லப்பிள்ளையாக மாற்றியுள்ளது.

அவ்வாறு சமீபத்தில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பிடிஆர் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் மத்திய அரசு மாநில அரசுகளை சதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என ஆரம்பத்தில் குற்றம் சாட்டினார்கள். ஆனால் இப்போது ஒன்றிய அரசு தான் தடுப்பூசியை மொத்தமாக வாங்கித் தர வேண்டும் என சொல்கிறீர்கள். அப்படி மத்திய அரசு தான் மொத்தமாக வாங்கித் தர வேண்டும் என்றல் அதில் பலனை அவர்கள் பெற்றுக் கொள்வதில் என்ன தவறு. vaccine certificateல் பிரதமரின் புகைப்படம் வருவதைக் கூட குறை சொல்கிறீர்கள் எனக் கேட்கப்பட்டது.

இதற்கு ஆக்ரோஷமாக பதிலளித்த பிடிஆர். மத்திய அரசுக்கு என்று தனியாக பணமோ, வாக்காளர்களோ இல்லை எல்லாம் மாநிலங்களில் இருந்து செல்வது தான். யாருடைய பணம் என்பது முக்கியமா. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ‘உங்களுடைய பணம் வானத்தில் இருந்தா வருகிறதா என மத்திய அரசிடம் கேட்டார். மத்திய அரசு வசூலித்தாலும், மாநில அரசு வசூலித்தாலும் எல்லாம் மக்களின் பணம் தான். இது யாருடைய பரம்பரைச் சொத்தும் கிடையாது. மக்களின் பணம் சரியான முறையில் செலவிடப்பட வேண்டும்” என்றார்.