"ராஜகோபாலனுக்கு 3 நாள் போலீஸ் காவல்” சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போக்சா நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசியராக பணியாற்றிய ராஜகோபாலன் என்பவர், அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கடந்த 2016-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரில் ராஜகோபாலன் 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ராஜகோபாலன் ஜாமீன் கோரி சென்னை போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும், ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி காவல்துறை சார்பிலும் மனு தாக்கல் செய்யபட்டது.
இந்த நிலையில், ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு, இன்று நீதிபதி முகமது பரூக் முன்பு காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆசிரியர் ராஜகோபாலனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். மேலும், நீதிமன்ற காவலில் அடைத்தது குறித்த விவரங்கள் நீதபதி முன்பு தாக்கல் செய்யபட்டது.
பின்னர் ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் மீண்டும் ராஜகோபாலனை ஜூன் 3 ஆம் தேதி ஆஜர்படுத்தவும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.