ஓட்டுப் போடுவதை நான் பெருமையாக நினைக்கிறேன்- மனம் திறந்து பேசிய நடிகர் அஜீத்
தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் ஆர்வமுடன் வாக்குச் சாவடிக்கு வருகை தந்து தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குச் சாவடிக்கு வந்த சினிமா பிரபலங்களில் முதல் நபராக இருந்தார் நடிகர் அஜித்.
திருவான்மியூர் அரசு பள்ளிக்கூடத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு தனது மனைவி சாலினியுடன் இன்று காலை 6.40-க்கு வந்தார் அஜீத். அவரை கண்டதும் வாக்குச்சாவடியில் இருந்த தேர்தல் அலுவலர்கள் அஜீத்தை உட்காரச் சொன்னார்கள். அதற்கு அஜித்தும், ஷாலினியும் வேண்டாங்க! நன்றி என்று சொன்னார்கள். 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியதும் வரிசையில் நின்று அவர்கள் வாக்களித்தார்கள்.
அஜித் வந்திருப்பதையறிந்து அவரிடம் பேசுவதற்கு இளம் வாக்காளர்கள் முயற்சி செய்து முண்டியடித்தனர். அதனை விரும்பாத அஜீத், ''இது ஓட்டுப் போடக்கூடிய இடம். எங்களை சாதாரண மனிதராக பாருங்கள் '' என்று கைப்கூப்பி கேட்டுக் கொண்டார்.

தேர்தல் அலுவலர் ஒருவர் அஜீத்திடம், ''காலையிலேயே வந்துவிட்டீர்களே சார்?'' என்று கேட்டார். அதற்கு அஜீத், ''ஓட்டுப் போடுவதை நான் பெருமையாக நினைக்கிறேன். முதல் நபராக நான் வரும் போது, என்னை பார்க்கும் எனது ரசிகர்களுக்கும், மக்களும் காலையிலேயே ஓட்டுப் போட வர வேண்டும் என்கிற உந்துதல் அவர்களுக்கு கிடைக்கலாம்.
வாக்களிக்கும் முதல் நபராக நாம் இருக்க வேண்டும். இது என் விருப்பம். அதனால்தான் காலையிலேயே வந்தேன் ' என்று கூறி தேர்தல் அலுவலரை வியப்பில் ஆழ்த்தினார் நடிகர் அஜீத்.