உச்சக்கட்ட கொந்தளிப்பில் பிரேசில் - இன்னொரு இலங்கையாகும் அபாயம்!
அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை எதிர்க்கும் வகையில், போல்சனாரோவின் ஆதரவாளர்கள் அரசு கட்டிடங்களை சூரையாடினர்.
வெடித்த வன்முறை
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்தாண்டு அதிபர் தேர்தல் நடந்தது. இதில், லுாயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். அதனையடுத்து, முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள், தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தலைநகர் பிரேசிலியாவில் உள்ள பார்லிமென்ட் வளாகம், உச்ச நீதிமன்றம் மற்றும் அதிபரின் மாளிகைக்குள், போல்சனாரோவின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் இரவு திடீரென நுழைந்தனர். அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி, கடும் வன்முறையில் ஈடுபட்டனர்.
உச்சக்கட்ட பரபரப்பு
இதற்கிடையே ராணுவம் வரவழைக்கப்பட்டு, பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின், வன்முறையாளர்களிடம் இருந்து இந்தக் கட்டடங்கள் மீட்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, காவல் துறை அதிகாரிகள் குறைந்தது 200 கலவரக்காரர்களை கைது செய்துள்ளனர்.
பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களை கலைத்துள்ளனர், நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் அதிபர் மாளிகையைச் சுற்றியுள்ள சூழ்நிலை கட்டுக்குள் உள்ளது. இந்த சம்பவத்துக்கு அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா டா சில்வா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மேலும், இதற்கு ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக், இந்திய பிரதமர் மோடி உட்பட பல நாட்டுத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.