சவப்பெட்டியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி மாளிகை நோக்கி படையெடுக்க உள்ள மனித நேய மக்கள் கட்சி

R. N. Ravi Governor of Tamil Nadu Chennai
By Thahir Mar 10, 2023 09:14 AM GMT
Report

மனித உயிர்க்கொல்லியான ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி சவப்பெட்டி ஊர்வலம் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கிறார்

இது தொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் ரம்மி எனப்படும், இணையச் சூதாட்டத்தால் ஏற்படும் உயிர்ப் பலியைத் தடுக்க தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்களின் தலைமையில் குழு அமைத்து அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி நிறைவேற்றியது.

அச்சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக ஆளுநர் கூறிய நிலையில், சட்ட அமைச்சர் ரகுபதி ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கமும் அளித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள், ஆன்லைன் ரம்மி நிறுவன அதிபர்களோடு ஆலோசனையிலும் ஈடுபட்டார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை 142 நாட்கள் கிடப்பில் வைத்திருந்த நிலையில், இக்காலகட்டத்தில் 47 தமிழர்கள் தம் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் நேற்று (8-03-2023) ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாவைத் திருப்பி அனுப்பினார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள மக்கள் நலன் சார்ந்த இருபத்திற்கும் அதிகமான சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயலாகும்.

சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆளுநரின் எதேச்சதிகார செயலைக் கண்டித்தும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட கிடப்பில் உள்ள அனைத்து சட்ட முன்வடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கக்கோரியும் வரும் 17ம் தேதி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

Protest with coffins in front of Governor House

இப்போராட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் நலனின் அக்கறையுள்ள அனைத்துத் தரப்புமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்