யாதவ சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரைக்கூட வேட்பாளராக அறிவிக்காத தமிழக அரசை கண்டித்து போராட்டம்
அகில இந்திய யாதவ மகாசபை தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாதவ சமுதாயத்தை சார்ந்த ஒருவரைக்கூட வேட்பாளராக அறிவிக்காத தமிழக அரசியல் கட்சிகளின் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் போது பேசிய அதன் தலைவர் ராதாகிருஷ்ணன்: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் யாதவ சமுதாய மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும் அப்படி பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் யாதவர்கள் சுயேச்சையாக நிற்க செய்வோம் என தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு கடிதம் மூலமாக அனுப்பியதாக அவர் தெரிவித்தார். அதேபோல் யாதவர் சங்கங்கள் ஒன்றிணைந்து யாதவர்கள் ஓட்டு யாதவருக்கே என கொள்கை முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
நாங்கள் கடிதம் மூலமாக அனுப்பிய எங்கள் கோரிக்கைகளை ஏற்று எங்களுக்கு பிரதிநிதித்துவம் அளித்துள்ள திராவிட கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளுக்கு நன்றியையும் அவர் தெரிவித்தார். ஆனால் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் ஒரு சட்டமன்ற தொகுதிகள் கூட யாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை எனவும், எனவே இது யாதவ மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் எனவும், எங்களுக்கு பிரதிநிதித்துவம் அளித்த கட்சிகளுக்கு மட்டுமே நாங்கள் உறுதுணையாக இருப்போம் என அகில இந்திய யாதவ மகாசபை தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக ஒருமனதாக முடிவு எடுத்துள்ளதாக அவர் கூறினார்.