ரவுடிபேபி சூர்யாவை கைது செய் - இல்லாவிட்டால் தற்கொலை செய்துக் கொள்வேன் : பெண்கள் போராட்டம்
டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யாவை கைது செய்யக்கோரி பெண்கள் சிலர் சென்னை கமிஷனர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா மீதான சர்ச்சைகளும், புகார்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. மேலும் பெண்களை மூளைச்சலவை செய்து வெளிநாடுகளுக்கு பாலியல் தொழிலுக்காக அனுப்பி வருவதாகவும், இதற்காக பணக்கஷ்டத்தில் உள்ள பெண்களுக்கு குறி வைப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் என்று அனைவரின் போட்டோக்களையும் மார்ஃபிங் செய்து சோஷியல் மீடியாவில் பரப்பி விடுவேன் என சூர்யா மிரட்டுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி சில பெண்கள் சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் அளித்தனர்.
ஏற்கனவே இவர்கள் இது தொடர்பாக 2 முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், நேற்று மறுபடியும் புகார் அளிக்க வந்திருந்தனர். ஆனால், அந்த பெண்களை போலீசார் நீண்ட நேரம் காக்கவைத்து, விசாரிக்காமலேயே திருப்பி அனுப்பியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதனால், 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கமிஷனர் ஆபீஸ் முன்பேயே போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
போராட்டம் நடத்திய பெண் ஒருவர் அளித்த பேட்டியில் ரவுடி பேபி சூர்யாவின் அடாவடித்தனத்தை தட்டிக் கேட்டதற்காக அவர் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார். என்னை பழி வாங்க ரவுடி பேபி சூர்யா தனது ஆண் நண்பருடன் இணைந்து, என்னுடைய போட்டோ, செல்போன் நம்பரை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனால் கடந்த 3 மாதங்களாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.
இது குறித்து 2 முறை போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.. நாளைக்குள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யாவிட்டால் எனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வேன் என தெரிவித்தார். இதனால் அந்த இடமே பரபரப்பானது.