அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கட்-அவுட்டுக்கு செருப்பு மாலை, பாவாடை
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடந்த 17ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதன்போது பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், உங்கள் கனவை சொல்லுங்கள் என கேட்கிறார்கள், எனக்கு நயன்தாரா வேண்டும், கனவை நிறைவேற்றுவாரா என அநாகரீகமாக பேசினார்.
இவரது பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், தென்னிந்திய நடிகர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மறைமுகமாக பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் மன்னிப்பு கேட்ட சிவி சண்முகம், தவறுதலாக நயன்தாராவின் பெயர் உச்சரிக்கப்பட்டு விட்டதாகவும், எந்தவிதமான உள்நோக்கத்துடன் அவரது பெயரை குறிப்பிடவில்லை எனவும் விளக்கம் அளித்தார்.

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், சேலை தருகிறார்கள், பாவாடை ... என முகம் சுழிக்கும் வகையில் பேசினார்.
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அரசின் திட்டங்களை விமர்சிப்பதாக பெண்களை உருவ கேலி செய்யும் வகையில் பேசினார்.
தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பேச்சு சர்ச்சையாகி வரும் நிலையில் பொள்ளாச்சியில் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை அணிவித்தும், பாவாடை அணிவித்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பஸ் நிலைய ரவுண்டானா, காந்தி சிலை சந்திப்பு, தேர்நிலை திடல் போன்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்களால் பரபரப்பை ஏற்படுத்தின.
தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் கட்அவுட்டை அப்புறப்படுத்தினர், இதை செய்தது யார் என விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.