பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைத்து விபச்சாரம் - 5 பேர் கைது
சென்னையில் பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைத்து விபச்சாரம் நடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண்களை வைத்து விபச்சாரம்
சென்னைக்கு வேலை தேடி வரும் இளம் பெண்களிடம் தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து விருகம்பாக்கம் காவல்துறையினர் சாலிகிராமம் சாந்தி காலனி தில்லையாடி வள்ளியம்மை தெருவில் உள்ள ஒரு வீட்டை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது அங்கு ஒரு பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
5 பேர் கைது
அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய மதுரையைச் சேர்ந்த கார்த்திக்கேயன் (46), திருநெல்வேலியைச் சேர்ந்த பெனடிக் நெல்சன் (53) ஆகிய இருவரை கைது போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த ஒரு பெண்ணை போலீசார் மீட்டனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பலிடம் இருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், திருவேங்கடசாமி தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் இதேபோன்று விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய அதே பகுதியை சேர்ந்த சாந்தி(50), ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த தேவி(38),நெசப்பாகம் பகுதியை சேர்ந்த சீதாதேவி(34) ஆகிய 3 பெண்களை கைது செய்தனர்.