நபிகள் நாயகம் குறித்து பேசிய தலைமையாசிரியருக்கு மரண தண்டணை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
நபிகள் நாயகம் கடைசி இறைத்தூதர் கிடையாது எனக் கூறிய பெண் தலைமையாசிரியர் ஒருவருக்கு தெய்வ நிந்தனை வழக்கில் மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள தனியார் பள்ளியின் தலைமையாசிரியாக பணியாற்றி வந்தவர் தன்வீர். இவர் தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக, உள்ளூர் மதத்தலைவர் ஒருவர் கடந்த 2013ம் ஆண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்புகாரில் நபிகள் நாயகம் கடைசி இறைத்தூதர் கிடையாது எனவும் நான் தான் கடைசி இறைத்தூதர் எனவும் தன்வீர் பிரகடனம் செய்ததாக குற்றம்சுமத்தியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது தன்வீருக்காக ஆஜரான வழக்கறிஞர் முகமது ரம்ஜான், வாதாடுகையில் தனது வாதியான தன்வீர் மனநிலை சரியில்லாதவர் எனவும், நீதிமன்றம் இதனை பரிசீலிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பஞ்சாப் மனநல மருத்துவக் கல்வி மையத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி, தன்வீர் மனநிலை சரியாகத் தான் இருப்பதாக கூறினர்.
தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிபதி மன்சூர் அகமது அளித்த தீர்ப்பில், தன்வீர் தெய்வ நிந்தனையில் ஈடுபட்டது ஊர்ஜிதமாகி இருக்கிறது.
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியிருக்கிறார். எனவே பெண் தலைமையாசிரியரான தன்வீருக்கு மரண தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக தீர்ப்பளித்துள்ளார்.
பாகிஸ்தானின் தெய்வ நிந்தனை சட்டங்கள் காலனி ஆதிக்க காலத்து சட்டங்களாகும். கடுமையான இச்சட்டங்கள் நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரியதாக விளங்கி வருகின்றன.
1987ம் ஆண்டு முதல் இதுவரை 1,472 பேர் தெய்வ நிந்தனை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். மேலும் இது போன்ற மிகவும் சீரியசான விவகாரங்களில் குறிப்பாக தெய்வ நிந்தனை வழக்குகளில் குற்றம்சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராவதை வழக்கறிஞர்கள் தவிர்த்த் வருகின்றனர்.
2010ம் ஆண்டு தெய்வ நிந்தனை வழக்கு ஒன்று அப்போது தலைப்புச் செய்திகளில் வந்தன. ஆசியா பிபி என்று பரவலாக அறியப்படும் ஆசிய நூரின் என்ற பாகிஸ்தானின் கிறிஸ்துவ பெண்மணி ஒருவர், பெண்கள் சிலருடன் பேசும்போது முகமது நபி குறித்து அவமதிப்பாக பேசியதாக அவர் மீது தெய்வ நிந்தனை வழக்கு தொடுக்கப்பட்டது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 2018ம் ஆண்டு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
இருப்பினும் மறுசீராய்வு தீர்ப்பு வரும் வரையிலும் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என உத்தரவிடப்பட்டது. ஆசியா பிபி தற்போது கனடாவில் ஒரு மறைவான இருப்பிடத்தில் வாழ்ந்து வருகிறார்.