ஜல்லிக்கட்டுக்கு தடையா? : இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு அளிக்கிறது.
ஜல்லிக்கட்டு தடை
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

தீர்ப்பு இன்று
நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில், 5 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் முக்கிய அம்சம் என்றும், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தையும், நாட்டு மாடு இனங்களை பாதுகாக்கவுமே ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படவில்லை என்ற தமிழ்நாடு அரசு வாதம் போலியானது என பீட்டா அமைப்பு தெரிவித்தது. கடந்த டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி இறுதி விசாரணை நிறைவடைந்ததால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி கே.எம்.ஜோசப் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவர் விசாரித்த முக்கியத்துவம் வாய்ந்த ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.