கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்க அரசாணை வெளியீடு
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசாணை வெளியீடு
கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி உள்ளிட்ட திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க நல வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக சமூக நலத்துறை அமைச்சர் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கடந்த ஆண்டு 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவி குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக "கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையில் சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் வாரியத்துடன் இணைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.