மாணவியிடம் அத்துமீறிய பேராசிரியர்: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி.!
சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியராக உள்ளவர் சௌந்தரராஜன். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் பேராசிரியர் சௌந்தரராஜன் மாணவர்களுக்கு வேண்டும் என்றே குறைவான மதிப்பெண்களை வழங்கி ஃபெயில் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் செமஸ்டர் பேப்பர்களை மறுமதிப்பீடு செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்தது. அதில் ஃபெயில் ஆன மாணவர்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களின் செமஸ்டர் பேப்பர்களும் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை பேராசிரியர் வெளியிடவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. தங்களுடைய மதிப்பெண்ணை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் மாணவர்கள் பேராசிரியரிடம் சென்று முறையிட்டுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சௌந்தர்ராஜன் மாணவி ஒருவரிடம் பாலியல் ரீதியாக வன்முறையில் ஈடுபட்டார் என மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் போராடிய மாணவர்களை சஸ்பெண்ட் செய்திருந்தது.
இந்த நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட மாணவி கையை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து 6-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் சேப்பாக்கத்தில் இருக்கக்கூடிய காவல்துறை குடோனில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல்வேறு மாணவ சங்கங்கள் போராட்டம் செய்ய உள்ளதாக தகவல் வந்த நிலையில் போலீசார் சென்னை பல்கலைக்கழகம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.