விருதுநகரில் மாணவிக்கு மாத கணக்கில் பாலியல் தொல்லை - பேராசிரியர் கைது
விருதுநகரில் மாணவிக்கு மாத கணக்கில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு கல்வி நிலையங்களில் ஏற்படும் பாலியல் தொல்லை குறித்த புகார்கள் மக்களை திடுக்கிட வைத்துள்ளன. அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் பகுதியைச் சேர்ந்த டென்சிங் பாலைய்யா சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
மேலும், இதே கல்லூரியில் தேசிய மாணவர் படை ( NCC) அமைப்பை நிர்வகித்து வருகிறார். இவர் தன்னிடம் படிக்கும் மாணவிக்கு சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் பேராசிரியர் டென்சிங் பாலையா கைது செய்யப்பட்டார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில் பேராசிரியர் அருப்புக்கோட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மீண்டும் தமிழக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.