நடிகர் சிம்புவுக்கு கொலை மிரட்டல் - முதல்வர் வீட்டு முன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக டி.ராஜேந்தர் அறிவிப்பு
நடிகர் சிம்புவுக்கு எதிராக கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாயார் உஷா ராஜேந்தர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சிம்புவின் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இந்த படம் தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில், சிம்பு தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாதபடி, ‘ரெட் கார்டு’ போடப்பட்டது. அதன்பின், சிம்புக்கு எதிரான ரெட் கார்ட் தடை நீக்கப்பட்டது. எனினும் இரு தரப்புக்குமான பிரச்சினை முடிவுக்கு வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சிம்புவின் தாயார் உஷா, தனது கணவர் டி.ராஜேந்தருடன் நேற்று வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தொடர்ந்து சிம்புவுக்கு பிரச்சினை கொடுத்து வருகிறார். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சிம்புவுக்கு எதிராக சதி செய்கிறார்.
மைக்கேல் ராயப்பன்தான் என் மகனுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளார். ஆனால், என் மகன் அவருக்கு பணம் தர வேண்டும் என மிரட்டுகிறார். இவருக்கு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சிலர் உடந்தையாக உள்ளனர். என் மகனுக்கு எதிராக கட்டப் பஞ்சாயத்து செய்து, ரெட் கார்ட் போடுவோம் என மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி. ராஜேந்தர் கூறியதாவது, மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர், சிம்புவுக்கு எதிராக சதி செய்கின்றனர். கொலை மிரட்டல் விடுக்கின்றனர். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், அவரது வீடு அல்லது கோட்டை முன் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளாம் என தெரிவித்துள்ளார்.