தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு பொறுப்பு
கோயில்களுக்கான அறங்காவலர்களை தேர்வு செய்ய தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசு பொறுப்பு சர்ச்சை
முதலமைச்சர் விஜய்யின் தவெக ஆட்சியில், விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு முக்கிய அரசு பொறுப்பு வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
முன்னதாக அவருடைய ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் முதல்வர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு அரசாணை வெளியானது. பின்னர் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த நியமனம் திரும்பபெறப்பட்டது.

அதனையடுத்து, லியோ, மாஸ்டர் போன்ற படங்களின் இணைத் தயாரிப்பாளரும் தனது மேலாளருமான ஜெகதீஷ் பழனிசாமி முதலமைச்சரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
மேலும், ஜனநாயகன் படத்தயாரிப்பாளரான கர்நாடகாவை சேர்ந்த கே.வெங்கட நாராயணா தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற அரசு பதவியில் நியமிக்கப்பட்டார்.
அரசு அமைத்துள்ள குழுவில் அர்ச்சனா கல்பாத்தி
தற்போது, பிகில் பட தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு அமைத்துள்ள குழுவில் இடம் அளிக்கப்பட்டுளளது.
இந்து சமய அறநிலையத் துறை ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட, விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து உரிய பெயர்ப் பட்டியல் தயாரித்து அரசுக்கு அளித்திட மாநிலக்குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது. இந்த குழுவின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
இந்த குழுவின் தலைவராக தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள். பொம்மபுரம் ஆதினம், மயிலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவின் துணைத் தலைவராக ஓய்வ பெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி டாக்டர். K.ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தயாரிப்பாளர் திருமதி அர்ச்சனா கல்பாத்தி அகோரம், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு. பராசம்பத் இ.ஆ.ப. (ஓய்வு), திருமதி. மாசுமதி (எ) சுமதிஸ்ரீ, டாக்டர் த.வேல்முருகன் ஆகியோர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதவி வழி உறுப்பினர்/செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |