சென்னையில் இருக்கும் மக்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு...!
சென்னையில் பஸ்களின் வழித்தடத்தை செல்போன் மூலமாக அறியும் புதிய செயலியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, மாநகர் போக்குவரத்து கழக பஸ்கள் இயங்கும் இடத்தை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் மேம்படுத்தப்பட்ட நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ‘சென்னை பஸ்’ என்ற செயலி தொடங்கப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இந்த செயலியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் கோபால், மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அனைத்து சென்னை மாநகர பஸ்கள் அனைத்திலும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு பயன்படும்படி பஸ்களின் வருகை நேரம், வந்துகொண்டிருக்கும் இடம் ஆகியவற்றை செல்போனில் தெரியும்படி தானியங்கி வாகன இருப்பிடம் இந்த செயலியில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மாநகர் போக்குவரத்து கழக பஸ்களில் தினந்தோறும் பயணம் செய்யக்கூடிய ஏறத்தாழ 25 லட்சம் பயணிகள் உள்பட பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வருகை தரும் பயணிகளும் இச்செயலியை பயன்படுத்தி கொள்ளலாம்.
அதேபோல இந்த செயலியை பயன்படுத்தி பஸ்களில் உரிய நேரத்தில் பயணம் செய்து, சென்னை புறநகர் ரெயில் நிலையம், சென்னை மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று தங்கள் பயணத்தை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உபயோகிப்பது எப்படி?
செல்போனில் ‘கூகுள் பிளே ஸ்டோருக்கு’ சென்று ‘சென்னை பஸ்’ செயலியை ‘டவுன்லோடு’ செய்யலாம். செல்போனில் தங்களது இருப்பிடத்தை (லொகேஷன்) ‘ஆன்’ செய்ய வேண்டும். பின்னர் டவுன்லோடு செய்த அந்த செயலிக்கு சென்றால் தங்களது இருப்பிடம் மற்றும் சுமார் 1 கி.மீ. தூரத்துக்குள் இருக்கும் பஸ் நிறுத்தங்கள் அடங்கிய வரைபடம் தெரியும்.
எந்த பஸ் நிறுத்தத்துக்கு செல்ல வேண்டுமோ அதனை ‘கிளிக்’ செய்ய வேண்டும். இதையடுத்து அந்த பஸ் நிறுத்தத்துக்கு வரக்கூடிய அனைத்து பஸ்களும், வரிசைப்படி, தட எண், பஸ் பதிவு எண் மற்றும் கணிக்கப்பட்ட நேரம் (நிமிடங்களில்) உள்ளிட்ட விவரங்களை அறியலாம். செல்ல வேண்டிய தட எண்ணை தேர்வு செய்யும் போது, தாங்கள் நிற்கக்கூடிய பஸ் நிறுத்தம் மற்றும் பஸ் வரும் இடம் ஆகியவை வரைபடத்துடன் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.