பிரதமர் மோடி எதிர்த்து வாரணாசியில் களமிறங்கும் பிரியங்கா..?
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் காங்கிரஸின் கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியை களமிறக்க அம்மாநில காங்கிரஸ் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
வரும் 2024-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 10 ஆண்டுகால ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொள்ள பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றிட காங்கிரஸ் கட்சியும் தற்போதிலிருந்தே பெரும் முயற்சிகளை மேற்கொள்ள துவங்கி விட்டன.
குறிப்பாக காங்கிரஸ் கட்சி மொத்தமாக 26 எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து மாபெரும் கூட்டணியை உறுதிப்படுத்தும் செயலில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்து வரும் மேற்குவங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ், டெல்லியின் ஆம் ஆத்மீ போன்ற கட்சிகளும் கூட்டணி கிட்டத்தட்ட சம்மதித்துள்ள நிலையில், இது பாஜகவிற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
வாரணாசியில் பிரியங்கா
இந்நிலையில், இந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியை களமிறக்க அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
வாரணாசி தொகுதி தான் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு இரண்டு முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது முறையாக அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவார் என நம்பப்படும் நிலையில், கடும் நெருக்கடியை ஏற்படுத்த அம்மாநில காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.