என் படத்தை பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது? பிரியங்காவுக்கு மின்டா தேவி கேள்வி!
பிரியங்கா நாடு முழுவதும் வெளிப்படுத்தி எனக்கு தொல்லையை ஏற்படுத்தி இருப்பதாக மின்டா தேவி ஆவேசம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் போராட்டம்
பிஹார் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றனர்.
தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பிரியங்கா காந்தி, ஆர்.சுதா உள்ளிட்ட சில எம்.பி.க்கள் மின்டா தேவி மற்றும் அவரது படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்திருந்தனர். டி-ஷர்ட் பின்புறத்தில் ‘124 நாட் அவுட்’ என்று எழுதப்பட்டிருந்தது.
மேலும், பிஹார் வாக்காளர் பட்டியலில் 124 வயது மின்டா தேவியின் பெயர் முதல்முறை வாக்காளராக இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டினர்.
மின்டா தேவி ஆவேசம்
இந்தப் போராட்டங்களுக்குப் பிறகு பேசிய பிஹாரின் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணான மின்டா தேவி, "பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி எனக்கென்ன உறவு? எனது படம் இடம்பெற்ற டி-ஷர்ட்களை அணிய அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள்?
எனக்கு இது தொடர்பாக அரசுத் தரப்பிலிருந்து எந்த போன் அழைப்பும் வரவில்லை. ஆனால், திடீரென ஏன் ராகுலும், பிரியங்காவும் எனது நலன் விரும்பிகளாகிவிட்டனர். இதெல்லாம் எனக்குத் தேவையில்லை. ஆயினும், வாக்காளர் பட்டியலில் எனது விவரங்களில் முரண்பாடுகள் உள்ளன.
அதில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். ஆதார் அட்டையின்படி எனது பிறந்த தேதி ஜூலை 15, 1990. ஆனால் என் வயது 124 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விவரங்களை யார் உள்ளீடு செய்தாலும், அவர்கள் கண்களை மூடிக்கொண்டு அவ்வாறு செய்தார்களா என்று தெரியவில்லை?
அரசாங்கத்தின் பார்வையில் எனக்கு 124 வயது என்றால், அவர்கள் ஏன் எனக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கவில்லை? வாக்காளர் பட்டியலில் எனது விவரங்கள் திருத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.