முதல் முறை எம்.பி-யாக பதவியேற்ற பிரியங்கா காந்தி; என்ன பேசுவார் - எகிறும் எதிர்பார்ப்பு!
வயநாடு மக்களவை தொகுதி எம்பியாக பிரியங்கா காந்தி பதவியேற்று கொண்டார்.
பிரியங்கா காந்தி
கேரளா, வயநாடு நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி, 6 லட்சம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். தொடர்ந்து, இன்று பிரியங்கா காந்தி நாடாளுமன்ற மக்களவையில் எம்பியாக பதவியேற்று கொண்டார்.

அப்போது கையில் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி பதவியேற்றார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார். நாடாளுமன்ற அவையின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த அண்ணன் ராகுல் காந்தியை, பிரியங்கா காந்தி வணங்கிவிட்டு சென்றார்.
பதவியேற்பு
இதையடுத்து நடப்பு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தில் பிரியங்காகாந்தி பேச்சு எப்படி இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. முன்னதாக வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை டெல்லியில் பிரியங்கா காந்தியிடம் கேரள காங்கிரஸ் தலைவர்கள் வழங்கினர்.

அப்போது பிரியங்கா காந்திக்கு ராகுல் காந்தி இனிப்பு வழங்கி உபசரித்தார். தன் மீது நம்பிக்கை வைத்து தனக்கு ஆதரவு அளித்த வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    