சிக்கியது தனியார் பள்ளி..ஆசிரியர் மீது முன்னாள் மாணவிகள் புகார்.
பி.எஸ்.பி.பி, சுசில் ஹரி, எம்.வி.எம் பள்ளிகளைத் தொடர்ந்து மேலும் ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியர்கள் மீது முன்னாள் மாணவிகள் இருவர் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மூலம் பாலியல் சீண்டல், பாலியல் தொல்லை உள்ளிட்டவைகளுக்கு ஆளானதாக பல பள்ளிகளில் முன்னாள் மற்றும் இன்னாள் மாணவிகள் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கே.கே நகர் பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், எம்.வி.
எம் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா உள்ளிட்டோர் அப்பள்ளிகளில் பயின்ற முன்னாள் மற்றும் இன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வரிசையில் மேலும் ஒரு தனியார் பள்ளியும் சிக்கியுள்ளது. சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சாலையில் பி.எஸ் (பெண்ணாத்தூர் சுப்பிரமணியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி) தனியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரைப் பயின்ற முன்னாள் மாணவிகள் 2 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி-யிடம் புகார் ஒன்றை அளித்தனர்.
அந்தப் புகாரில் தாங்கள் பி.எஸ் பள்ளியில் பயின்ற காலகட்டத்தில் அங்கு பணியாற்றிய 3 ஆசிரியர்கள் மூலம் தங்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டத்தாக தெரிவித்து அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர். புகாரில் சம்மந்தப்பட்ட பள்ளி மயிலாப்பூர் காவல் எல்லைக்குள் வருவதால் புகார் மனுவானது மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு புகாரில் முகாந்திரம் உள்ளதா? என விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் 2 மாணவிகள் அளித்த புகாரில் முகாந்திரம் இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து மாணவிகள் அளித்த புகாரில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பி.எஸ் பள்ளியின் ஆசிரியர்கள் சிவகுமார், வெங்கட்ராமன் மற்றும் ஞானசேகரன் ஆகிய 3 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தவுள்ளதாகவும், புகார் அளித்த மாணவிகள் மூலம் தேவையான ஆதாரங்களை திரட்டவுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.