பால், தயிர் விலை உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
தனியார் பால் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பால், தயிர்
பால் கொள்முதல் விலை அடிக்கடி உயர்த்தப் படுவதால் தனியார் பால் விலையும் உயர்த்தப்படுகிறது. சமீப காலமாக கால்நடை தீவனப் பொருட்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் ஹெரிடேஜ், ஜெர்சி, ஆரோக்கியா ஆகிய 3 தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகின்றன.
இதுகுறித்து தனியார் பால் நிறுவனங்கள் தரப்பில் பேசியபோது, ``மூலப்பொருள்கள் விலையும், பால் கொள்முதல் விலையும் உயர்ந்த காரணத்தால்தான் விற்பனை விலையை உயர்த்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.
விலை உயர்வு
அதன்படி தனியார் பால் விலை 3 வகையாக பிரித்து உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.50-ல் இருந்து ரூ.52 ஆக உயருகிறது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.62-ல் இருந்து ரூ.64 ஆகவும் உயர்கிறது.
ஆவினில் இந்த பால் பாக்கெட் லிட்டர் ரூ.44-க்கு விற்கப்படுகிறது. நிறை கொழுப்பு பால் ரூ.70-ல் இருந்து ரூ.72 ஆக அதிகரிக்கிறது. ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.60 என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல தயிர் லிட்டர் ரூ.72-ல் இருந்து ரூ.74 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.