‘வீட்டுக்கடன் கட்டவில்லை’ - வீட்டு சுவரில் அநாகரிக செயலை செய்த தனியார் நிதிநிறுவனம்!
'வீட்டுக்கடன் செலுத்தவில்லை' என்று வீட்டின் சுவறில் எழுதிவிட்டுச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்.
தனியார் நிதி நிறுவனம்
தேனீ மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அன்னை இந்திராகாந்தி நகர் காலணியை சேர்ந்தவர் பிரபு. இவர் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபு, தனது வீட்டை தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூ. 3 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
பின்னர் வாங்கிய கடனுக்கு முறையாக தவணை செலுத்திய பிரபு, அதிகாரிகளிடம் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்துள்ளனர். மேலும், பிரபு இன்னமும் ரூ1.50 லட்சம் வரை கடன் தொகை பாக்கி செலுத்த வேண்டி உள்ளதாகவும், செலுத்தி விட்டு ஆவணங்களை வாங்கி செல்லும்படி நிதி நிறுவனம் கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் பிரபு வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டுக்கு சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், அவரது வீட்டுச் சுவரில் ‘வீட்டுக்கடன் செலுத்தவில்லை’ என்று பெரிய எழுத்துக்களில் பெயிண்டால் எழுதியுள்ளனர்.
அநாகரிக செயல்
மேலும் வீட்டிலிருந்தவர்களையும் மிரட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியான பிரபு, கடனுக்கு பணம் செலுத்திய பிறகும் மிரட்டி வரும் தனியார் நிதி நிறுவனத்தின் மீது காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
மேலும் ஆவணங்களை மீட்க வேண்டும் என்றும் போலீஸாரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பிரபு "ஏற்கெனவே ஒருமுறை தாமதமாக மாதத்தவணை செலுத்தியபோது, நிதி நிறுவனத்தினர் எனது இருசக்கர வாகனத்தை எடுத்து சென்றுவிட்டனர்.
திருப்பி தர கேட்டதற்கு மறுத்ததால், காவல் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் மூலம் வாகனத்தை மீட்டேன். இதனை மனதில் வைத்துதான் இப்போது இந்த சதிவேலையை செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.