தனியார் பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூல் ! பொதுமக்கள் கவலை!
புதுக்கோட்டையில் தனியார் பேருந்துகள் மக்களிடம் 3 மடங்கு அதிகமாக கட்டணத்தை வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்களின் போராட்டம் 3-வது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பேருந்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களும் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். மூன்று நாள் போராட்டத்திற்கு பலனாக போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அரசு பேருந்துகள் இயங்காததால், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு தற்போது எழுந்திருக்கிறது. 3 மடங்கு வரை உயர்த்தி தனியார் பேருந்துகள் கட்டணத்தை வசூலிப்பதாக பொதுமக்கள் தங்கள் வேதனைகளை தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்வதற்கு அரசு பேருந்துகளில் ரூ.37 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அரசு பேருந்துகள் இயங்காததை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் 100 முதல் 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதற்காக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.