ஆட்டோ மீது மோதிய தனியார் பேருந்து : ஆத்திரத்தில் தீ வைத்த மக்கள்

puducherry privatebusaccident
By Petchi Avudaiappan Dec 02, 2021 05:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

விழுப்புரத்தில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதால் பொதுமக்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் - புதுச்சேரி பிரதான சாலையில் உள்ள கவிதா தியேட்டர் அருகே இன்று மாலை புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநர் அர்ஜூனன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் அர்ஜூனனின் உறவினர்கள் ஆத்திரத்தில் பேருந்தின் மீது கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதனால்  பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் இறங்கி ஓடினர். 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் போலீசார் பேருந்து மீது தாக்குதல் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேருந்தின் பின் பகுதியில் தீ வைத்தார்.

சிறிது நேரத்தில் மளமளவென பேருந்து முழுவதும் பரவிய தீ கொளுந்துவிட்டு எரிந்தது. நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். ஆனால் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநரின் உறவினர்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் புதுச்சேரி - விழுப்புரம் இடையே இயக்கப்படும் தனியார் பேருந்து அதிக வேகத்தில் செல்வதால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெறுவதாகவும் போக்குவரத்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.