தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள்.. 4 பேர் பிடிபட்டனர்
தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையிலிருந்து காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடிய கைதிகள்
தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறையில், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் காவலர் தங்கப்பாண்டி பலத்த காயமடைந்தார். மேலும், இரண்டு காவலர்கள் லேசான காயமடைந்தனர்.
இதுகுறித்து, சிறைக் காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் தப்பியோடிய கைதிகளைத் தேடி வருகின்றனர்.
இதுவரை 4 கைதிகள் பிடிபட்டுள்ள நிலையில், மீதமுள்ள கைதிகளை பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.