சிறையில் பயங்கர தீ விபத்து - 41 கைதிகள் உடல் கருகி பலி
இந்தோனேசியா நாட்டின் பாண்டன் மாகாணத்தில் அமைந்துள்ள சிறையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 41 கைதிகள் உடல் கருகி பலியாகினர்.
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தோனேசியா ஏற்கனவே பல சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனாவால் அங்கு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாகவே மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றது.
இதுவே மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தோனேசியாவின் பான்டென் மாகாணத்தில் உள்ள தங்கெராங்க சிறைச்சாலையில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட மோசமான குற்றங்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்கள் அடைக்கப்படுவது வழக்கம்.
இந்த சிறையில் இந்தோனேசிய நேரப்படி அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் இந்த விபத்தில் சிறையில் தூங்கிக் கொண்டிருந்த 41 கைதிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 8 பேருக்கு மோசமான தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.