‘ நிர்வாணமாக வாங்க’ - ஆபாசமாக பேசிய தலைமையாசிரியர்
மத்தியப்பிரதேசத்தில் மாணவிகளிடம் பள்ளி தலைமையாசிரியர் ஆபாசமாகப் பேசியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக இருப்பவர் ராதேஷ்யாம் மாளவியா என்பவர் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி பள்ளிக்கு சீருடை அணியாமல் வந்த 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளை அழைத்துள்ளார்.
அவர்களிடம் ஏன் பள்ளிச்சீருடை அணிந்து வரவில்லை' என ராதேஷ்யாம் கேட்டுள்ளார். அதற்கு அம்மாணவிகள் தங்களின் சீருடை இன்னும் தைக்கப்படவில்லை எனக் கூறியுள்ளனர்.அதை ஏற்க மறுத்த பள்ளி தலைமையாசிரியர் மாணவிகளை ஆபாசமாகத் திட்டியுள்ளார்.
ஃபேஷனான உடை அணிந்து மாணவர்களைக் கெடுப்பதே நீங்கள் தான்.பள்ளி சீருடை இல்லாவிட்டால் நிர்வாணமாக வாருங்கள் என மோசமான வார்த்தைகளால் மாணவிகளை திட்டி தீர்த்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதையடுத்து போலீசார் பள்ளி முதல்வர் ராதேஷ்யாம் மாளவியா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.