என் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார் : இங்கிலாந்து இளவரசர் சொன்ன திடுக்கிடும் தகவல்
இங்கிலாந்து அரசக் குடும்பம் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றது. ராஜகுடும்பம் என்றாலும், வீட்டுக்கு வீடு வாசப்படி தான் என்பது போல, இளவரசர்களுக்குள் வெளியில் சொல்லப்படாத சண்டை, இளவரசி டயானாவின் மரணம், இளவரசர் ஹாரி மற்றும் மனைவி மேகன் அரசப்பட்டதை துறந்தது என இந்த ராஜ குடும்பத்தில் பல சர்ச்சைகள் உள்ளன.
இங்கிலாந்து அரச குடும்ப சர்ச்சை
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு, இளவரசர் ஹாரி அவரது மனைவி மேகன் தங்களது அரச பதவிகளை துறந்தனர். அதன் பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேட்டி அளித்தனர்.

அதில், அரசக் குடும்பம் மேகனையும், மேகனை திருமணம் செய்துகொண்டதால் தன்னையும் எப்படி நடத்தினர் என்பதை பற்றி பேசியிருந்தனர். இந்நிலையில், இளவரசர் ஹாரியின் புத்தகமான Spare இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது.
ஹாரிக்கு அவமரியாதை
இதில் பல அதிர்ச்சிகர சம்பவங்களை நினைவுக்கூர்ந்துள்ளதாக தி கார்டியன், இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதில் இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் குறித்த விவாதம் ஒன்றின் போது, வில்லியம் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார் ஹாரி. “எனது காலரை பிடித்து இழுத்து கீழே தள்ளினார். விழுந்ததில், நாய்க்கு உணவு வைக்கும் பாத்திரம் உடைந்து அதன் துகள்கள் என் மீது பட்டதில் காயம் ஏற்பட்டது. ஒரு நிமிடம் தலை சுற்றி நினைவிழந்ததுபோல ஆனது என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.