புதுச்சேரி கூட்டத்தில் திருக்குறளை மேற்கோள்காட்டிய பிரதமர்
புதுச்சேரி மற்றும் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. புதுச்சேரியிலும் கோவையிலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசியதுடன், வெற்றிவேல் வீரவேல் என முழக்கமிட்டு அனைவரையும் கவர்ந்துள்ளார்.
காரைக்கால் ஜிப்மர் புதிய வளாகத்துக்கு அடிக்கல் நாட்டியதுடன், புதுச்சேரி ஜிப்மரில் ரத்த மையத்தையும் திறந்து வைத்தார். அப்போது கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறும் வகையில், "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" என்னும் திருக்குறளை மேற்கோள் காட்டினார். இதேபோல் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கீழ்பவானி பாசனத்தை மேம்படுத்தும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது உழவின் சிறப்பை எடுத்துக் கூறும் வகையில், "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" என்னும் திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
கோவையில் பாஜக பொதுக்கூட்டத்தில், வெற்றிவேல் வீரவேல் எனக் கூறித் தனது உரையைப் பிரதமர் மோடி தொடங்கினார்.