பிரதமரை கொல்ல சதி குற்றச்சாட்டில் கைதான கவிஞர் வரவரராவுக்கு ஜாமின்
கடந்த 2018-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பீமா கொரேகானில் வன்முறை அரங்கேறியது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட பல செயற்பாட்டாளர்கள் மத்திய அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது பிரதமரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்தார்கள் என்கிற வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை எனச் சொல்லப்பட்டு வந்தது. இந்த வழக்கில் போலியான ஆதாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த வழக்கில் சிறையில் உள்ள 81 வயது கவிஞர் வரவரராவ் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் ஜாமின் கோரி பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் வரவரராவுக்கு ஆறு மாதங்கள் ஜாமின் வழங்கி பம்பாய் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.