'பிரதமர் மோடி' திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் - அவரின் பிரார்த்தனை இதுதான்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
பிரதமர் மோடி
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். அவரை முதல்வர் ஜெகன்மோகன், துணை முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் அப்துல் நசீர், அமைச்சர் பெ. ராமசந்திராரெட்டி, டிஜிபி ராஜேந்திர நாத் உள்ளிட்ட பலர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இதனையடுத்து சாலை மார்க்கமாக காரில் திருமலைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள ரச்சனா சிறப்பு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார். இந்நிலையில் இன்று காலை விஐபி பிரேக் தரிசனத்தில் நெற்றியில் நாமம் போட்டு, பிரத்யேக வஸ்திரம் அணிந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார் பிரதமர் மோடி.
பிரார்த்தனை
அவருக்கு திருமலை கோயிலில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏழுமலையானை வழிபட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் தீர்த்த பிரசாதங்கள், நினைவுப் பரிசுகள், வேத மந்திரங்கள் ஓதப்பட்டு வழங்கப்பட்டன.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி "140 கோடி இந்தியர்களின் நல் ஆரோக்கியம், நலன் மற்றும் வளமான வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.