பிரதமர் மோடி 14ம் தேதி சென்னை வருகிறார் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!
பிரதமர் நரேந்திர மோடி 14ம் தேதி சென்னை வருவதால் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 14ம் தேதி சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை விமான நிலையத்திற்கு காலை 10.40 மணியளவில் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கிற்கு செல்ல இருக்கிறார்.
நேரு விளையாட்டு அரங்கில் மெட்ரோ ரெயில் விரிவாக்கம் மற்றும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் முக்கிய சந்திப்புகள் நடத்த 20 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்பின், பிரதமர் மோடி பிற்பகல் 1.30 மணியளவில் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறார். மோடி வருகையை ஒட்டி 4 அடுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி 3 மணி நேரம் மட்டுமே சென்னையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதனையடுத்து, சென்னை விமான நிலையம், அடையாறு ஐஎன்எஸ், நேரு உள்விளையாட்டரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க சுமார் ஒரு லட்சம் பேர் வருகை தருவார்கள் என்று தெரிய வந்துள்ளது. எனவே, சென்னையில் அந்த நேரத்தில் சுமார் 5 ஆயிரம் வாகனங்கள் வரக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ளது.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிக்கல் இல்லை. பிரதமர் வருகையின் போது சென்னையின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். குறிப்பாக காமராஜர் சாலை, பூவிருந்தமல்லி சாலையில், சென்டிரல் ரயில் நிலையத்துக்கு முன்பு வரை மற்றும் அண்ணா சாலை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.