‘இளமையில் சாமியார், கலவர வழக்கில் கைது; மக்களவையில் அழுகை.. இப்போது முதல்வர், நாளை ? - ஒரு சாமியார் முதல்வரான கதை
அன்று சாதாரண சீடனாக இருந்து தனது குருவிற்காக அரசியலில் குதித்து, பல்வேறு சர்ச்சைகளை கடந்து இன்று மீண்டும் உ.பி.யின் அரியணை ஏறி..மோடிக்கு அடுத்ததாக இந்தியாவின் பிரதமராக பார்க்கப்படும் ஒரு சாமியார், பாஜக-வின் முகமாக மாறிய கதை.
அன்றைய உத்தரப் பிரதேச மாநிலம் (இப்போதைய உத்தரகாண்ட்) பவுரி கர்வாலில் உள்ள பஞ்சூர் என்ற கிராமத்தில் ஜூன் 5, 1972-ம் ஆண்டு அஜய் சிங் பிஷ்ட்டாகப் பிறந்து பின்னாளில் நாடறியும் யோகி ஆதித்யனாத்தாக மாறிய சீடனின் பின்னணி குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
இளமையில் துறவறம் :
ஆதித்யனாத்தின் தாய் சாவித்ரி தேவி ஒரு இல்லத்தரசி, அவரின் மறைந்த தந்தை, ஆனந்த் சிங் பிஷ்ட், ஒரு வனப் பாதுகாவலராக இருந்துள்ளார்.
4 சகோதரர்களில் இரண்டாவதாக பிறந்த யோகி மூன்று சகோதரிகளுடன் தனது பால்ய காலத்தை கடந்துள்ளார்.
உத்தரகாண்டில் உள்ள ஹேம்வதி நந்தன் பஹுகுனா கர்வால் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த இவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கத்தில் சேருவதற்காக 1990-களில் தனது வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னாளில் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் தலைமை பூஜாரி அவைத்யநாத்தின் சீடராகவும் மாறினார்.
சாமியார் to அரசியல் :
அப்போதைய அரசியல் சூழலில் முக்கிய அரசியல்வாதியாக கருதப்பட்ட மஹந்த் அவைத்யநாத் 1998-ம் ஆண்டில் முழுநேர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்து அந்த காலக்கட்டத்தில் சந்திக்கவிருந்த மக்களவைத் தேர்தலில் கோரக்பூர் தொகுதியின் தனது பிரதிநிதியாக யோகியை முன்னிறுத்தினார்.
அதுவரை அரசியலில் சிறிதளவு கூட அனுபவமில்லாத யோகி தனது குருவின் உண்மையான சீடன் என்ற தகுதியுடன் மட்டுமே தேர்தலில் களமிறங்கினார்.
யாரும் எதிர்பாராத விதமாக அபார வெற்றி பெற்று தனது 26-வது வயதில் இளம் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பிறகு சந்தித்த 4 மக்களவைத் தேர்தலிலும் மக்களின் ஆதரவுடன் தொடர்ந்து வெற்றி பெற்று எதிர் கட்சிகளை திக்குமுக்காடச் செய்து வரலாறு படைத்தார்.
கலவர வழக்கில் கைது மக்களவையில் அழுகை:
மக்களவை உறுப்பினராக இருந்தபோது அவர் மீது 2007-ம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் நடந்த கலவர சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அப்போது உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கில் யோகியிடம் விசாரணை நடத்தப்பட்டது, மேலும் அவர் 11 நாள் ஜெயில் தண்டனையும் அனுபவிக்க நேரிட்டது.
இந்த விவகாரத்தில் காவல்துறை எனக்கு அநீதி இழைக்கிறது என்று கூறி மக்களவையில் யோகி ஆதித்யநாத் அழுததை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
ஏனெனில் அரசியலில் அப்படிப்பட்ட இக்கட்டான கால கட்டங்களை கடந்த வந்த இவரை தான் தற்போது மோடிக்கு பிறகு அடுத்த பிரதமர் வேட்பாளர் என மக்கள் கூறுகின்றனர்.
தன் ஆன்மீக குருவான மஹந்த் அவைத்யநாத் உடல்நலக்குறைவு காரணமாக 2014-ல் மறைந்து போகவே கோரக்நாத்தின் தலைமை பூசாரியாக யோகி ஆதித்யனாத் பதவி அமர்த்தபட்டு அவைத்யநாத்தின் நம்பிக்கைக்குறிய சீடராக மாறி கோயில் பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றுவதில் சிறந்து விளங்கினார்.
ஆர்.எஸ்.எஸ்-இன் செல்லப்பிள்ளை:
அவரே பின்னாளில் மக்கள் விரும்பும் குருவாகவும் மாறுகிறார். தனது 44-வது வயதில் தலையை மொட்டையடித்துக் கொண்டு சந்நியாசி போன்று உடையணிந்து திருமணமே செய்து கொள்ளாமல் சந்நியாசியாகவே வாழ்ந்து வருகிறார்.
முன்னாள் முதல்வர் ராஜ்நாத் சிங்கிற்கு மிகவும் வேண்டப்பட்டவராக தன்னை காட்டிக்கொள்ளும் யோகி பாஜக-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-இன் செல்லப்பிள்ளையாக கருதப்படுகிறார்.
கோரக்பூர் மக்களின் இதயம் கவர்ந்த பூசாரியாக விளங்கும் யோகியை அங்குள்ள மக்கள் கடவுளாக வணங்குகிறார்கள் என்றே கூறலாம். அவர் தெய்வத்தின் மறு அவதாரம் என்றும் அவர் ஒரு கடவுள் என்றும் பெரும்பாலான மக்கள் பல தருணங்களில் கூறுயிருக்கிறார்கள்.
யோகி முதல்வர்:
20 கோடி மக்கள் தொகையை கொண்டு நாட்டிலேயே பெரிய மாநிலமாக திகழும் உத்தர பிரதேசம், நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அம்மாநிலத்தில் இருந்து மட்டும் 80 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு மக்கள் சேவையாற்ற செல்கிறார்கள்.
கடந்த 2017-ம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக சமாஜ் வாடி கட்சியை தோற்கடித்து ஆட்சியை பிடித்தது. முக்கியத்துவம் வாய்ந்த மாநிலத்தை கைப்பற்றிய பாஜக, முதல்வராக யாரை தேர்ந்தெடுக்க போகிறது என்பதை உற்றுநோக்கி ஒட்டுமொத்த இந்தியாவே காத்திருந்தது.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக யோகி ஆதித்யனாத்தை மாநிலத்தின் முதல்வராக கட்சி தலைமை தேர்ந்தெடுக்க, அவரின் பெயர் கோரக்பூர், உத்தர பிரதேசத்தை தாண்டி நாடு முழுவதும் அறியப்பட்டது.
அதுநாள் வரை பெரிதாக அறியப்படாத யோகி அன்று முதல் உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராக அறியப்பட்டார்.
இந்தியாவுக்கு பதிலாக இந்துஸ்தான் :
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு பசு வதைக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்கிய யோகி, மத மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தையும் அமல்படுத்தினார்.
மேலும், ஒரே மாதிரியான குடிமைச் சட்டம், இந்தியா என்ற பெயருக்கு பதிலாக இந்துஸ்தான் என்று பெயர் மாற்றுதல் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கோரக்பூர் பெஞ்ச் நிறுவுதல் போன்ற தனி நபர் மசோதாக்களை கோரக்பூர் எம்.பியாக நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.
உ.பி.யின் முதலமைச்சராக அறியப்பட்ட யோகி அடிக்கடி மத உணர்வை தூண்டும் வகையில் சர்ச்சைக் கருத்துக்களை பல தருணங்களில் பேசியுள்ளார். அதன் மூலமாகவே மக்கள் மத்தியில் அவர் பெருமளவில் அறியப்பட்டார்.
வன்முறை, கொலை முயற்சி, குற்றவியல் மிரட்டல், முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைகுறிய வகையில் பேசியது என இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஏராளமான வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது.
ஏழ்மையான மாநிலம் :
என்னதான் அரசியல் ரீதியாக உத்தர பிரதேசம் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக திகழ்ந்தாலும் நாட்டிலேயே ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாக உ.பி. தொடர்ந்து இருந்து வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், உ.பி மேலும் பின்னடைவையே சந்தித்தது. கடந்த ஆண்டுகளில் அந்த மாநிலத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் என அம்மாநிலத்தை பற்றிய செய்திகள் தலைப்பு செய்தியாக வலம் வந்ததெல்லாம் எல்லோருக்கும் நினைவிருக்கும்.
கொரோனாவில் சுடுகாடான உ.பி :
மேலும், கடந்த ஆண்டு கோவிட் -19 தொற்றுநோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிகை நடவடிக்கையில் மோசமான நிர்வாகத்தை வெளிப்படுத்தியதற்காக உ.பி. மீண்டும் தலைப்பு செய்திகளில் அடிப்பட தொடங்கியது.
ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சையின்றி இறந்து மாண்டனர், சுடுகாடுகளில் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்களின் சடலங்கள் இரவும் பகலுமாக எரிந்த வண்ணம் இருந்தது,
இந்தியாவின் புனித நதியான கங்கை நதி சடலங்களால் மிதந்த செய்தியை இந்திய ஊடகங்கள் சில கண்டுக்கொள்ளவில்லை என்றாலும் கடல் தாண்டி நாடுகள் தாண்டி காடு மலைகள் தாண்டி ஆங்கில பத்திரிகைகளிலும் செய்திகளிலும் காண முடிந்தது.
இப்போ மோடி .. அடுத்து யோகி ?
ஆனால் குடிமக்கள் வெளிப்படுத்திய விரக்தி, எதிர்ப்புகளை எல்லாம் மாற்றி சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இரண்டாவது முறையாக வெற்றிபெற்று, மற்றும் ஒருமுறை முதல்வர் அரியணை ஏறியுள்ளார் ஆதியோகி.
இவரின் இந்த வெற்றி பாஜகவின் தோற்றத்தை இந்திய அரசியல் வரலாற்றில் ஆணித்தரமாக பதிவு செய்துள்ளது.
மோடிக்கு பிறகு யோகி ஆதித்யனாத்தை தான் பிரதமர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்த திட்டமிட்டுள்ளது என கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி யோகியின் பதவியேற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.