ஸ்கொட்லான்ட் வரும் சிறிலங்கா அதிபர் கோட்டாபயவை கைதுசெய்ய அழுத்தம்!!
எதிர்வரும் 2021 ஒக்டோபர் 31 முதல் நவம்பர் 12 ம் திகதி வரையில் கிளாஸ்கோவில் (Glasgow) நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 2021 காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சில சிறிலங்கா படைத்துறை அதிகாரிகளை கைதுசெய்வதற்கான அழுத்தங்களை சர்வதேச சட்ட நிறுவனம் ஒன்று வழங்கிவருகின்றது.
சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சேவைகளை வழங்குகின்ற Global Rights Compliance LLP என்ற அமைப்பு இந்த முறைப்பாடுகளை வழங்கியுள்ளது.
ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறிலங்காவின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உட்பட பல சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court (ICC) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச அதிகாரவரம்பு கொள்கையின் கீழ் சிறிலங்கா அரச தலைவர் உட்பட குற்றம்சுமத்தப்பட்ட அதிகாரிகளை கைதுசெய்வதற்கான பிடிவிராந்தை வெளியிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்கு பிரித்தானிய தேசியப் காவல்துறை அதிகாரிகளுக்கும் Global Rights Compliance LLP பிரதிநிதித்துவங்களை அனுப்பி வைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட 200 இலங்கைத் தமிழர்கள் சார்பாக Global Rights Compliance LLP என்ற சட்டவல்லுனர் அமைப்பினால் ரோமச் சட்டத்தின் 15ஆவது சரத்தின் (Article 7 of the Rome Statute) கீழ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துபவருக்கு இத்தொடர்பாடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் சர்வசே விதிமுறைகளின்படி ஒரு அரச அதிபருக்கான இராஜதந்திரப் பாதுகாப்பு நியதிகளின் அடிப்படையில் சிறிலங்கா அரச அதிபரை ஐக்கிய ராஜ்ஜியத்தில் வைத்து கைதுசெய்வதற்கான அனுமதியை ஸ்கொட்லான்ட் அரசாங்கம் வழங்காது என்று தெரிவிக்கின்றார்கள் சில சட்ட வல்லுனர்கள்.