பாகிஸ்தான் அரசியலில் புதிய திருப்பம் : இம்ரான் கானின் பரிந்துரைபடி பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு

pakistan Imrankhan
By Irumporai Apr 03, 2022 09:21 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்கு ஆளும் இன்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என குற்றம் சாட்டியுள்ள, எதிர்க்கட்சிகள் , இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளன.

அத்துடன் இன்ரான் கானுக்கு அளித்துவந்த ஆதரவை MQM கட்சியும், விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்தது. இதன் காரணமாக இம்ரான்கான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாகவே பெரும்பான்மையை இழந்துவிட்டது.  

ஆட்சியை தக்கவைக்க மொத்தம் உள்ள 342 இடங்களில் 172 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், இம்ரான்கானுக்கு 162 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருந்தது.

அதேநேரம் எம்.கியூ.எம் கட்சியின் ஆதரவால் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக கூடியிருந்தது. இதனால் பெருமான்மையை இழந்துள்ள இம்ரான்கான் அரசு ஆட்சியை இழக்கும் நிலைக்கு ஆளானது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், இன்று ( ஏப்ரல் 3 ஆம் தேதி) ஒட்டெடுப்பு நடத்தப்பட இருந்தது. இதனால் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

பெரும் பரபரப்புக்கிடையே இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடிய நிலையில், துணை சபாநாயகர் அவையை நடத்தினார். சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததால், துணை சபாநாயகரால் அவை நடத்தப்பட்டது.

அப்போது வாக்கெடுப்புக்கு முன்னதாகவே எதிர்கட்சிகளின் தீர்மானத்தை நிராகரிப்பதாக துணை சபாநாயகர் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இது பாகிஸ்தான் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் கூறி பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை அவர் நிராகரித்திருக்கிறார்.

இதனால் இம்ரான் கானின் அரசு தற்காலிகமாக தப்பித்திருக்குறது. பாகிஸ்தான் அரசியலில் இது புதிய திருப்பமாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து ஏப்ரல் 25ம் தேதிக்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார்.    

இதனையடுத்து பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார். அப்போது பாகிஸ்தான் துணை சபாநாயகரின் நடவடிக்கை சரியானதுதான் என்று பாராட்டிய அவர், ஆட்சியைக் கலைத்து, புதிதாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மக்கள் விரைவில் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். 3 மாதத்திற்குள் தேர்வு நடத்தவும் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இம்ரான் கான் பதவியை இழப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.