இலங்கை அதிபர் தேர்தல்...நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு - வெல்லப்போவது யார்?
இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க உள்ளதால் அந்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டம்
இலங்கையில் கடும் கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்ததை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டம் நாளடைவில் மோதலாக மாறியது.இதையடுத்து அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அதிபர் கோட்டபய ராஜபக்ச பதவி விலக கோரி மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து பிரதமர் மற்றும் அதிபர் தங்கள் பதவியிலிருந்து விலகி அந்நாட்டை விட்டு தப்பிச்சென்றனர்.
அதிபர் தேர்தல்
இதனை தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். இந்நிலையில் அடுத்த அதிபரைத் தோந்தெடுப்பதற்கானத் தோதல், இன்று நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செவ்வாய் கிழமை நடைபெற்றது. முன்னதாக அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்தார்.
அதிக ஆதரவு யாருக்கு?
தான் நேசிக்கும் நாடு மற்றும் மக்களின் நலனுக்காக போட்டியில் இருந்து விலகுவதாக அவர் டிவிட்டரில் பதிவிட்டார். இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரேமதாசா, டலஸ் அழகப்பெருமா அதிபர் பதவிக்கு முன்னிறுத்துவதாக அறிவித்தார்.
மொத்தமுள்ள 225 எம்.பிக்களில் அதிபராக தேர்வு செய்யப்படுபவருக்கு 113 பேரின் ஆதரவு தேவை. தற்போதைய சூழலில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி எம்பிக்களில் பெரும்பாலானோர், டலஸ் அலகப்பெருமாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டலஸ் அழகப்பெருமாவை அதிபராகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை பிரதமராகவும் தேர்வு செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இதன் காரணமாகவே சஜித் பிரேமதாசா அதிபர் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த 1993 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் இடைக்கால அதிபரை தேர்வு செய்வது இதுவே முதல் முறை. 1993ஆம் ஆண்டில் அதிபராக இருந்த ரணசிங்க பிரேமதாசா கொல்லப்பட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் டி.பி.விஜேதுங்க அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.