20 நாள்கள் ஆயிடுச்சு.. பெண் மருத்துவர் கொலைக்கு முர்மு கொடுத்த ரியாக்ஷன்!
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை அதிர்ச்சியளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வேதனை தெரிவித்துள்ளார்.
மருத்துவர் கொலை
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆக. 9ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடுமையாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது .
இதுதொடர்பாகக் காவல் துறையில் தன்னார்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சஞ்சய் ராய்,ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷி மற்றும் 4 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.ஐ அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டியும், இந்தக் குற்றத்திற்குத் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவும் கடந்த 20 நாள்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் , மாணவர்கள்,செவிலியர்கள் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
திரெளபதி முர்மு வேதனை..
இந்த நிலையில் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை அதிர்ச்சியளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்திருப்பதாவது : மேற்குவங்கம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை அதிர்ச்சியளிக்கிறது.
நீதி கேட்டு மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது குற்றவாளிகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர். நிர்பயாவுக்குப் பிறகு 12 ஆண்டுகளில் எண்ணற்ற வன்கொடுமைகளை இந்தச் சமூகம் மறந்துவிட்டது.
உண்மையை ஏற்றுக்கொள்ள மறந்து, கூட்டு மறதியைக் கையாளுகிறது. இச்சமூகம் தன்னை நோக்கி சில கடுமையான கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.