பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது - நேரில் வழங்கினார் ஜனாதிபதி!
பாரத ரத்னா விருதை அவரது வீட்டிற்கே சென்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார்.
பாரத ரத்னா விருது
இந்தியாவின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருது இந்த ஆண்டில் 5 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முன்னாள் பிரதமர்களான மறைந்த பி.வி.நரசிம்மராவ், சரண் சிங், மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்வரான மறைந்த கர்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவருர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருது வழங்க அறிவிக்கப்பட்டது.
மூத்த தலைவர் அத்வானி
இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நரசிம்ம ராவ் சார்பில் அவரது மகன் பிரபாகர் ராவ், சரண் சிங் சார்பில் அவரது பேரன் ஜெயந்த் சவுத்ரி, எம்.எஸ்.சுவாமிநாதன் சார்பில் அவரது மகள் நித்யா ராவ், கர்பூரி தாக்கூர் சார்பில் அவரது மகன் ராம்நாத் தாக்கூர் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கினார்.
இதையடுத்து, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு மட்டும் வயது மூப்பு காரணமாக அவரது வீட்டிற்கே நேரில் சென்று, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று டெல்லியில் உள்ள அத்வானி வீட்டிற்கு சென்று அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் மற்றும் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு மேலும் பலர் கலந்து கொண்டனர்.