பெரும் தொற்று சமயத்தில் கடினமான இலக்குகளை நாம் சாதித்துள்ளோம் - கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரை!
இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக, கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையேயும் கூட்டத்தொடரை நடத்த வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.

அதன் படி, இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. அப்போது பேசிய அவர், இக்கட்டான சூழலிலும் இந்தியா வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பல உயிர்களை காப்பாற்றி உள்ளது.
பெரும் தொற்று சமயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. கடினமான இலக்குகளையும் நாம் சாதித்து காட்டி இருக்கிறோம். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் பெரும் தொற்று காலத்தில் பெரும் பலனை அளித்தது என்று தெரிவித்தார். மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் உள்ளது.
ஏழைகள், பெண்கள் என பலரும் அரசின் நலத்திட்டங்கள் பயனடைந்துள்ளனர் வைரஸ் தாக்கத்தால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சுய சார்புடன் இருப்பதுதான் தற்போது இந்தியாவின் தாரக மந்திரமாக இருக்கிறது என்றும் கூறினார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் குடியரசு தலைவரின் உரையை புறக்கணித்தன.