புதிய நாடாளுமன்ற கட்டிடம்; ஜனாதிபதி திறப்பது தான் சரியா? எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான திட்டத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2020, டிசம்பர் 10-ம் தேதி அடிக்கல் நாட்டினார். 970 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடிகொண்ட முக்கோண வடிவிலான கட்டடமாக `சென்ட்ரல் விஸ்டா' என்ற பெயரில் கட்டப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டடத்தில் மக்களவையில் சுமார் 888 பேர் வரையிலும், மாநிலங்களவையில் 300-க்கும் அதிகமான உறுப்பினர்கள் அமரும் வகையிலும் கட்டப்பட்டிருக்கின்றன.
கண்டனம்
நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் கலந்துகொள்ளும் வகையில் நடைபெறும் கூட்டு கூட்டத்தின்போது 1,280 உறுப்பினர்கள் வரை ஒரே நேரத்தில் அமரும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது. வருகிற மே 28-ம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படவிருக்கிறது.

இதனை பிரதமர் மோடி திறந்துவைப்பதற்குப் பலரும் தங்களது கண்டங்களைத் தெரிவித்துவருகின்றனர். மேலும், திறப்பு விழா தேதியான மே 28-ம் தேதி, சாவர்க்கரின் பிறந்தநாள். அந்தத் தேதியை தேர்ந்தெடுத்ததற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
மேலும், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் குடியரசுத் தலைவர்தான் திறந்துவைக்க வேண்டும். பிரதமர் அல்ல என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திறப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.