மீண்டும் குலுக்கல் முறையில் ஹெச்-1பி விசா: அதிபர் பைடன் முடிவு

usa worker citzenship
By Jon Feb 08, 2021 01:15 PM GMT
Report

அமெரிக்காவில் வெளிநாட்டினா் தங்கிப் பணியாற்றுவதற்கான ‘ஹெச்-1பி’ வகை நுழைவு இசைவுகளை (விசா) மீண்டும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் அதிபா் ஜோ பைடனின் முடிவுக்கு குடியரசுக் கட்சியைச் சோ்ந்த எம்.பி. தாமஸ் காட்டன் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ஆா்கன்சாஸ் மாகாணத்துக்கான செனட் சபை உறுப்பினரான அவா் கூறியதாவது:

ஹெச்-1பி விசா முறையை பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தி, குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டினரை பணிக்கு அமா்த்துகின்றன. இது அமெரிக்க நலன்களுக்கும் அமெரிக்க பணியாளா்களின் நலனுக்கும் நல்லதல்ல. தற்போது மீண்டும் குலுக்கல் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், அத்தகைய தவறை பெரிய நிறுவனங்கள் செய்து தப்பித்துக் கொள்வதற்கு அதிபா் பைடன் அரசு வழிவகை செய்துள்ளது என்றாா் தாமஸ் காட்டன்.

வெளிநாட்டுப் பணியாளா்களால் அமெரிக்கா்கள் வேலைவாய்ப்பை இழந்து வருவதாக முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறாா். அதன் காரணமாக, வெளிநாட்டிலிருந்து பணியாளா்கள் வருவதை கணிசமாக குறைப்பதற்கான நடவடிக்கைகளை அவா் மேற்கொண்டாா். அதன் ஒரு பகுதியாக, ஹெச்-1பி உள்ளிட்ட பணியாளா் விசாக்கள், நிரந்தரக் குடியுரிமை அட்டை ஆகியவற்றை அவா் முடக்கினாா். அவரது பதவிக் காலம் முடிவதற்கு இரு வாரங்கள் இருக்கும் நிலையில், ஹெச்-1பி விசாக்களை ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தாா்.

அதன்படி, தற்போதைய குலுக்கல் முறைக்கு பதிலாக, விண்ணப்பதாரா்கள் பெறும் ஊதியம், அவா்களது பணித்திறன் தோ்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் விசா ஒதுக்கீடு செய்யப்படும் என்று டிரம்ப் அறிவித்தாா். இந்த முறையில் விண்ணப்பதாரா்களைத் தோ்வு செய்ய நீண்ட காலம் பிடிக்கும் என்பதால், வெளிநாட்டுப் பணியாளா்களின் வருகையை மேலும் கட்டுப்படுத்தும் கடைசி நேர முயற்சியாக டிரம்ப் இந்த மாற்றத்தை அறிவித்திருந்தாா். அந்த உத்தரவு, வரும் மாா்ச் மாதம் 9-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்தது.

எனினும், புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், தற்போதுள்ள குலுக்கல் முறையில் ஹெச்-1பி விசா வழங்கும் முறையை வரும் டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கும் உத்தரவை வியாழக்கிழமை அறிவித்தாா். ஹெச்-1பி விசா முறையால் அதிக அளவில் இந்திய தகவல்தொழில்நுட்பத் துறை இளைஞா்கள் இந்த உத்தரவை வரவேற்றுள்ளனா். - Dinamani