மேகதாது அணைக்கு அனுமதி பெற நடவடிக்கை - கர்நாடக பட்ஜெட் 2023
மேகதாது அணை
காவிரியின் குறுக்கே மேகதாது அணையை காட்டுவோம் என்று கர்நாடக அரசு தெரிவித்திருந்த நிலையில். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அவர்களை டெல்லியில் சந்தித்து பேசினார் . அவரிடம் காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது சாதாரணமான விவகாரம் அல்ல உயிர் பிரச்சனை என்றும் உச்ச நீதி மன்றத்தின் ஆணைப்படி நமக்கு தர வேண்டிய நீரை தராமல் இருப்பது சட்டப்படி குற்றம் ஆகும் என்று தெரிவித்தார். மேலும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் பேச்சு மூலமாகவோ எழுத்து மூலமாகவோ எந்த ரூபத்தில் பேச்சு வார்த்தை நடத்தினாலும் மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம் என்று துரைமுருகன் பேட்டியளித்திருந்தார்.
கர்நாடக பட்ஜெட் தாக்கல்
இந்நிலையில், கர்நாடகாவில் தேர்தல் முடிந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் "மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். நிலம் கையகப்படுத்துதல், இழப்பீடு வழங்குதல் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்றும் சித்தராமையா பட்ஜெட்டில் அறிவித்தார். ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புகளை ஏதும் வெளியிடவில்லை.