கள்ளக்குறிச்சி கலவரம்; திடீர் என நடந்த வன்முறை அல்ல...திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை - நீதிபதி
கள்ளக்குறிச்சி கலவரம் திடீர் என நடந்த வன்முறை அல்ல,திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை என நீதிபதி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலவரம்
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராடட்டம் கலவரமாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்பட 58 போலீசார் காயமடைந்தனர்.
கலவரத்தின் போது பள்ளியின் உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் சொத்துக்களை அடித்து நொறுக்கினர்.
இதில் பள்ளி முழுவதும் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது.இந்த கலவரம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
போராட்டம் நடத்த அனுமதி அளித்தது யார்? - நீதிபதி
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவி மரணம் குறித்து அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த வழக்கை முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா கோரிக்கை வைத்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று முதல் வழக்காக விசாரித்த நீதிபதி சதீஷ்குமார். இந்த வன்முறை தீடீரென நடந்த மாதிரி அல்ல..திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் உள்ளதாக தெரிவித்தார்.
இந்த போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது யார்? இதை ஒருங்கிணைத்தது யார்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.