துளசி வாசம் மாறலாம்.. தவசி வார்த்தை மாறாது - பிரேமலதா விஜயகாந்த் உறுதி!
அதிமுக-தேமுதிக கூட்டணி சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் திருச்சியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விருதுநகர் தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரனை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கருப்பையா, கரூர் தங்கவேல், பெரம்பலூர் சந்திரமோகன் உள்ளிட்ட 40 வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர்.
வெற்றி கூட்டணி
இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
“ஜெயலலிதா இல்லாத சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் முதல் தேர்தல் இது. நான் தே.மு.தி.க. பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, விஜயகாந்த் மறைந்த பிறகு முதல் முறையாக சந்திக்கும் பாரளுமன்ற தேர்தல் இது. நாங்கள் இருவரும் ராசியான வெற்றி கூட்டணியை வரும் காலத்தில் நிச்சயமாக சாதித்துக் காட்டுவோம்.
அ.தி.மு.க.வும் - தே.மு.தி.கவும் மக்களுக்கு ஒரு சிறந்த அடையாளமான கட்சியாக விளங்குகிறது. அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும். இரண்டு நாட்கள் வரைக்கும் கூட்டணியில் இருக்கின்றோம் இருக்கின்றோம் என நாடகம் நடத்தியவர்கள் எல்லாம், தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடனே துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று கூடாரத்தையே கிளப்பி வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட்டார்கள்.
சட்டமன்றத் தேர்தல்
ஆனால் தே.மு.தி.க. அப்படி கிடையாது. ஒரு வார்த்தை சொன்னால் அந்த வார்த்தையில் உறுதியாக இருப்போம். நம்பிக்கையாக இருப்போம். ஏனென்றால், எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். கொங்கு மண்டலக்காரர்கள் மரியாதை மிக்கவர்கள். அன்பானவர்கள். அதே போல நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் என ஒவ்வொரு முறையும் நிரூபித்து காட்டுகிறார்.
ஒரு வார்த்தை சொன்னால் சொன்னது தான். துளசி வாசம் மாறலாம். தவசி வார்த்தை மாறியதாக வரலாறு கிடையாது. என்ன நடந்தாலும் அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க. இருக்கும் என உறுதி கொடுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.