விஜயகாந்துக்கு மணி மண்டபமும், சிலையும் - தமிழக அரசுக்கு பிரேமலதா கோரிக்கை!
விஜயகாந்துக்கு பொது இடத்தில் ஒரு மணி மண்டபமும், சிலையையும் அமைக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "இறுதி அஞ்சலியில் பங்கேற்ற அனைவருக்கும் தலை வணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசிடம் கோரிக்கை
அவர் பெயர் நிலைத்திருக்கும் வகையில் பிரம்மாண்டமாக சமாதியை நிறுவ இருக்கிறோம். இனி பொதுமக்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் கிடையாது.
யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தேமுதிக தலைமையகத்துக்கு வரலாம். அதே நேரம், பொது இடத்தில் ஒரு மணி மண்டபமும், சிலையையும் அமைக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
இதை மக்கள் கோரிக்கையாக வைக்கிறோம். அதை அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம். அவர் விட்டுச் சென்ற பணிகள் ஏராளமாக இருக்கின்றன. தேமுதிகவினர் ஒரே கரமாக இணைந்து, விஜயகாந்தின் லட்சியத்தை வென்றெடுப்போம்" என்றார்.