திமுகவுடன் தேமுதிக கூட்டணியா? முதல்வருடனான சந்திப்பு குறித்து பிரேமலதா விளக்கம்
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.
முதல்வரை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்
உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதல்வரின் ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த சந்திப்பின் போது, துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிகவை சேர்ந்த சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.
திமுக கூட்டணியில் தேமுதிக?
அதிமுகவில் ராஜ்யசபா சீட் தராததால் தேமுதிக கூட்டணி மாற உள்ளதா என விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், " முதல்வருடைய உடல் நலம் எப்படி இருக்கிறது என்பதை விசாரிக்கவே அவரை சந்திக்கே வந்தேன். உடல் நலம் இப்போது நன்றாக உள்ளதாகவும், இன்றிலிருந்து மீண்டும் அரசு பணிகளை தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
கேப்டனுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக தொலைபேசியில் அழைத்து விசாரிப்பார். நேரில் வந்து சந்திப்பார். கேப்டன் குணமாக வேண்டும் என்று பல அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்.
திமுக கூட்டணியில் தேமுதிக இணையுமா என்ற தொனியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்த சந்திப்பை நீங்கள் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள். நாங்கள் நட்பு ரீதியாக சந்தித்தோம். கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் இருக்கிறது தேவையான நேரத்தில் நாங்கள் அறிவிப்போம்" என தெரிவித்துள்ளார்.