தனக்குத்தானே சுய பிரசவம் பார்த்து குழந்தையை இழந்த கர்ப்பிணி
தாயே அலட்சியமாக செயல்பட்டதால் பிறந்த சில நேரமே ஆன பச்சிளங்குழந்தை இறந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, செட்டிவீதியில் உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்த விஜயகுமார் நகை பட்டறை தொழிலாளி ஆவார்.
விஜயகுமார் - புண்ணியவதி தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் 4-வது முறையாக கர்ப்பமானதால் பிரசவம் குறித்து அலட்சியப் போக்கிலேயெ இருந்துவந்துள்ளார் புண்ணியவதி.
மனவருத்தத்துடன் இருந்ததாக கூறப்படும் நிறைமாத கர்ப்பிணியான புண்ணியவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டில் வைத்து தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார்.
பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்த நிலையில் குழந்தையின் தொப்புள்கொடி சரியாக அறுபடாததால் சற்று நேரத்திலேயே குழந்தையும், தாயும் மயக்கமடைந்துள்ளனர்.
அதன் பிறகே தாயும் சேயும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லப்பட்டனர்.
தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட புண்ணியவதியும் குழந்தையும் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சரியாக பிரசவம் பார்க்காததால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய பெரியகடை வீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, தாய் புண்ணியவதி மீது இந்திய தண்டனை சட்டம் 315- ( குழந்தை செத்துப்பிறக்க வேண்டும் அல்லது பிறந்த உடன் சாக வேண்டும் என்று செயல்படுவது) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.