ரயிலுக்காக காத்திருந்த கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம்
ரயிலுக்காக காத்திருந்த கர்ப்பிணியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேசம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண் தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளோடு பபட்லா மாவட்டம் ரிபள்ளி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு வேலை தேடி குண்டூரில் இருந்து கிருஷ்ணா மாவட்டத்திற்கு செல்வதற்காக ரயிலுக்காக காத்திருந்தார்.
இரவு வெகுநேரம் காத்திருந்தும் ரயில் வராததால் நடைமேடையில் இருந்த இருக்கையில் படுத்து இளைப்பாறியுள்ளனர். அப்போது குடிபோதையில் அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று உறங்கிக்கொண்டிருந்த பெண்ணின் கணவரை எழுப்பி வம்பிழுத்து அவரை தாக்கியுள்ளனர்.
இதை கர்ப்பிணி மனைவி தடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த 3 பேரும் கணவரை விட்டுவிட்டு, ரயில் நிலையித்தில் இருந்து கர்ப்பிணியை தரதரவென்று அருகேயிருந்த புதர் பகுதிக்கு இழுத்து சென்றனர்.
செய்வதறியாத கணவர் ரயில்வே போலீசாரின் உதவியை தேடி சென்றுள்ளார். ஆனால் ரயில்வே போலீசார் கதவை திறக்காதகால் அருகில் உள்ள காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
அதற்குள் போதையில் வந்திருந்த மூன்று பேரும் கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் படுகாயமடைந்த கர்ப்பிணியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதையில் கர்ப்பிணி என்றும் பாராமல் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.