ஆதார் இல்லை..கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு - தாயும், இரட்டை சிசுவும் பரிதாப பலி!
ஆதார் அட்டை காட்டாததால் சிகிச்சை மறுக்கப்பட்டு, கர்ப்பிணி பெண்ணும், இரட்டை சிசுவும் உயிரிழந்துள்ளனர்.
கர்ப்பிணி
தமிழகத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவர் பிழைப்புக்காக தனது கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் அவர் கணவர் உயிரிழந்த நிலையில், கர்நாடகா தும்மகூருவுக்கு மகளுடன் குடிப்பெயர்ந்துள்ளார்.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கஸ்தூரிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பக்கத்து வீட்டு பெண் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆதார் அல்லது அடையாள அட்டையை கேட்டுள்ளனர்.
சிகிச்சை மறுப்பு
அது இல்லாததால் சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனை நிர்வாகிகள் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறிய நிலையில், பணம் இல்லாததால் அவரை வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார்.

அதனையடுத்து, கஸ்தூரிக்கு நள்ளிரவில் வீட்டிலேயே பிரசவம் நிகழ்ந்துள்ளது. இதில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், தாயும், இரட்டை சிசுவும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பரிதாப பலி
எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதச்சாரபற்ற ஜனதாதளம் கண்டனங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதில் டியூட்டி டாக்டர் உஷா, 3 செவிலியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும், மாவட்ட சுகாதார அலுவலர் மஞ்சுநாத் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதுதான் முதல் வேலை என அறிவுறுத்தினார்.